பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, நன்றாகப்படிக்கவைத்து, மகனுக்கு நல்ல வேலைதேடி தந்ததும், பெண்ணுக்கு நகைகள் சேமித்து, நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைத்ததும் நம் கடமை முடிந்து விடுகிறது என்று எண்ணி, காலம் காலமாக இதையே கடமையாகச்செய்து வருகிறோம்.
நாம் இப்படி கடமைக்காக நம் கடமையை செய்வதால் ,பிள்ளைகளும் தன் கடமைக்காக பெற்றோர்களுக்கு கடமையை செய்கிறார்கள். தாய் தந்தையை பணம் செலுத்தி முதியோர் இல்லங்களில் விடுகிறார்கள் , பெற்றோர் இறந்த செய்தி வந்தாலும் கூட, அதிகம் 10,000 அனுப்புகிறேன் இறுதி சடங்கும் நீங்களே செய்துவிடுங்கள் என்று முதியோர் இல்லத்திற்கு சேதி அனுப்பும் கொடூர மனம் கொண்டவராய் மாறிவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் புகட்டி நல்ல முறையில் எதிர்காலத்தில் அவர்கள் தன் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராகவும், அலுவலகத்தில் நல்ல ஊழியராகவும், ஒரு நல்ல நட்பாகவும், உறவுக்காரனாகவும், சமூகத்திற்கு நல்ல குடிமகனாகவும் இருக்கும்படி வளர்கிறோமா என்றால் இல்லவே இல்லை.
குழந்தைகளை செல்லமாக வளர்க்கிறேன் பேர்வழி என்று அவர்கள் கேட்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கித் தந்துவிடுகிறோம். அந்த பொருள் அவர்களுக்கு இந்த பருவத்தில் அவசியம் தானா அதனால் அவர்களுக்கு என்ன நன்மை , என்ன தீமை என்பதை யோசிப்பதே இல்லை. குழந்தைகளிடம் அந்த பொருட்கள் நெருக்கமாக, நாம் அந்நியப்பட்டுப்போகிறோம். தன் தேவயை பூர்த்தி செய்யும் ஒரு எந்திரமமாகவே குழந்தைகள் பெற்றோர்களை பார்க்கத்தொடங்கிவிடுகின்றன.
3 வயது குழந்தையிடம், அது அழும்போது அதை சமாதானப்படுத்தவும் தன் வேலைக்கு இடஞ்சல் இல்லாமல் இருக்கவும் , நாம் நம் கைபேசியில் ஒரு விளையாட்டை போட்டு அதனிடம் கொடுத்து விடுகிறோம். அது அதில் உள்ள எந்திரமனிதனை பார்க்கிறது அதை உயிருள்ள ஜீவனாக எண்ணி அதனோடு விளையாடுகிறது. அந்த எந்திரமனிதன், சுடுகிறான், விமானத்திலிருந்து குண்டு போட்டு தாக்குகிறான். இதெல்லாம் அந்த பிஞ்சு நெஞ்சில் ஆழமாக பதிந்து விடுகிறது. சிறிது வளர்ந்த பின் ப்ளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர்கேம் என அவர்கள் வாழ்க்கை முழுதும் ஒரு சின்ன பெட்டிக்குள்ளிருக்கும் எந்திரங்களோடே பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த எந்திர வழ்க்கையின் அவசரகதியில் பெற்றோர்களின் அன்பையும் அரவணைப்பையும் ஸ்வாசிக்கத் தவறிவிடுகிறார்கள் இவர்கள். வளர்ந்த பின் உண்மையிலேயே இதுப்போன்ற தீவிரவாத செயல்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும் அவை அவர்களை பெரிதாக பாதிப்பதில்லை.
அந்த காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. அங்கே பாட்டிகள் குழந்தைகளுக்கு நிறைய நீதிக்கதைகள் சொல்லுவார்கள். ராமாயணம், மஹாபாரதம், போன்ற இதிகாசங்களையும், மற்றும் பல வரலாறுகளைக்கூறுவதன் வாயிலாக குழந்தைகளின் உள்ளுணர்வோடு கலந்து பேசி, அவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்கள், பண்பாடு., கலாச்சாரம் போன்றவற்றை கற்பித்தார்கள். ஆனால் இப்போது..,இந்த கூட்டுக் குடும்பங்கள் நகரத்திலுள்ள மரங்களில் காணப்படும் ஒரு சில பறவைக்கூடுகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய். காணப்படுகின்றன. அவையும் உயிறற்ற வெறும் கூடுகளாய்...,
இன்று.., கதை சொல்ல வேண்டிய முதியவர்களோ குழந்தைகளாய் தங்களுக்குள் கதைகள் பேசியவண்ணம் முதியோர் இல்லங்களில்.., கதைகள் கேட்கவேண்டிய குழந்தைகளோ மனமுதிர்ந்த முதியோர்களாய்.., வறண்ட மன நிலையோடு தங்கள் இல்லங்களில். :(
No comments:
Post a Comment