Search This Blog

28 May 2016

ரகசியமானது காதல்...!

       அவளும் அவனும் சந்தித்துக் கொள்ளப் போகும் முதல் சந்திப்பு. முகநூலில் அறிமுகமாகி முதன்முதலாக நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். முகநூலில் அறிமுகமான பின்னரே அவளுக்குத் தெரிந்தது அவன் ரைட்டர் என்று. அவனுக்கு எழுதப் பிடிக்கும், அவளுக்கு எழுத்துக்கள் பிடிக்கும். அவனைக் காதலிக்கும் முன்பே அவனது எழுத்துக்களைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள். அவன் எழுதிய காதல் கதையில் வரும் கதாநாயகியாக தன்னையே பாவித்துக் கொண்டாள். கதா(தை) நாயகனாக அவனையே நினைத்துக் கொண்டாள். அக்கதையின் பயணத்துடனே அவளின் காதலும் பயணித்துக் கொண்டு இருந்தது அவளுடன், அவள் அறியாமலே. நண்பனாக இருந்தவனை எப்போது எந்த நிமிடத்திலிருந்து காதலனாக நினைக்கத் தொடங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்றும் புரியவில்லை.

        சமீர் சிங்கப்பூரில் வேலை செய்கிறான். எழுதுவது அவனுக்கு பிடிக்கும். மீரா சென்னைப் பொண்ணு. அவளை விட சமீர் இரண்டு வயது சிறியவன். அதனால் காதல் பற்றிய சிந்தனை அவளுக்கு அறவே இல்லை. ஆனால் சமீர் எப்போதும் அவனை தம்பி என்று கூற அனுமதிக்கவே மாட்டான். ஏதாவது சொல்லி அவளை வம்பிழுப்பான் அத்தை மகளையோ, காதலியையோ வம்புக்கு இழுப்பதைப் போல. இவளும் இரண்டு வயது சிறியவன் என்பதால் பெரிதாக கண்டுகொள்ள மாட்டாள். அவளுக்கு வந்திருக்கும் வரன் பற்றி அவனிடம் சொல்லும்போது கூட “அப்போ என்னோட நெலம” என்று கேட்டு கிண்டலடித்தான். அவன் கவிதை எழுத ஒரு கற்பனைக் காதலி தேவை, நான் உன்னை என்னோட Girl Friend ஆ நினைச்சுக்கிறேன் என்பான். ஏய் நீ அடி வாங்க போற என்று சிரித்துக்கொண்டாலும் அவளுக்கு அந்த கவிதைகளுக்கு சொந்தக்காரியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

   இருவரும் நெருங்கிய நண்பர்களாகிய பின் முதல் முறையாக அவன் லீவுக்கு ஊருக்கு வரப் போகிறான். அவனுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். அப்போது அவளுக்கு அவனைக் காதலிப்பது பற்றி எல்லாம் எந்த சிந்தனையும் இல்லை. இருந்தாலும் அவன் வரப்போவதை நினைத்து் சந்தித்துக் கொள்ளப் போவதை நினைத்தும் அவளுக்கு அவ்வளவு உற்ச்சாகம். அவன் சென்னை வழியாக தான் அவன் சொந்த ஊருக்கு போவதாக சொன்னான். அதனால் விமான நிலையத்தில் அவனை வரவேற்று இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தார்கள். மிகவும் உற்சாகமாக இருந்தாள். அவனும் அதே மனநிலையில் தான் இருந்தான். இப்போது வரை அவளுக்கு அவனை காதலிப்பது பற்றி எந்த சிந்தனையும் இல்லை. ஆனாலும் தன் நண்பனை முதல் முறையாக சந்திக்கப்போவதை நினைத்து அவளுக்கு மிகுந்த உற்சாகம். 

    ஆனால் கடைசியில் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு வேறு விமானத்தில் வேறு வழியில் சென்னை வராமலே அவனது ஊருக்கு சென்று விட்டான். அவளுக்கு ஏமாற்றம்தான் ஆனாலும் சரி பரவாயில்லை பிறகு சந்தித்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து கொண்டாள். அதான் இன்னும் ஒரு மாதம் இந்தியாவில் தானே இருக்கப் போகிறான். அவன் முதலிலேயே சொல்லி விட்டான் ஊருக்கு வந்தால் ஒரு 15 நாட்களுக்கு வேலையாக இருப்பேன் சரியாக பேசவோ, மெசேஜ் பண்ணவோ, சந்திக்கவோ முடியாது என்றும் பொண்ணு பாக்குற வேலை, நண்பனின் திருமணம் என்று அவனுக்கு நிறைய வேலை உண்டு என்று. ஆனால் விதி அவனுக்கு எந்தப் பெண்ணும் அமையவில்லை அவளுக்கும் வரன் பேசிய இடத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவன் பிசியாக இருந்ததால் அவனிடம் பேசும் நேரங்களில் அவனுடைய எழுத்துகளைப் படிக்கத் துவங்கினாள். அவனது கவிதை, கதை எல்லாமும் அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

     பிறகு ஏதோ ஒரு நாளில் அவன் வழக்கம் போல அவளை வம்பிழுத்து பேசியதை இவள் ஏதோ புரிந்துகொண்டு அவன் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது அவளுக்கு. அதற்கு அவனுடைய பேச்சும், எழுத்தும் முக்கிய காரணம். அவளுக்கு ஒரு ஆசை இருந்தது. காதலிக்கணும்னே நினைக்காமல் நட்பாக மட்டுமே பழகி பிறகு எப்போது எந்த நிமிடம் காதலிக்க துவங்கினாள் என்பதே தெரியாமல் காதலித்து அப்படி ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று. அது அத்தனையும் அவனிடம் பொருந்தியது. இதை அப்படியே அவனிடம் கூறினாள். அவனும் இது ரொம்ப நல்லா இருக்கேன்னு சொன்னான். பிறகு அவள் உன்னிடம் ஒரு விஷயம் வெளிப்படையாக சொல்லணும் என்றாள். மனசுக்குள்ளயே வெச்சுக்க முடியல, நான் சொன்னேனே காதலிக்க ஆரம்பிச்சதே தெரியாம காதலிக்கணும்னு அந்த நபர் நீதான்னு தோணுது. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றாள். அதற்கு அவன் இல்ல சாரி டியர் நீ இந்து, நான்  முஸ்லீம், அது மட்டும் இல்ல எங்க வீட்ல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. ஊர் சைடுல அப்படிதான்னு சொன்னான். இவளுக்கு வருத்தமாக இருந்தாலும் சரி பரவாயில்லை நான் ஃபீல் பண்ணதை சொன்னேன் அவ்ளோ தான் எனக்கும் இந்த வயசு வித்தியாசம் சரியா வருமான்னு தெரியலைன்னு சொன்னா. பிராக்டிகலா ஒத்துவராதுன்னுதான் எனக்கும் தோணுது. ஒரு ஃப்ரண்டா உன்கிட்ட என்னோட ஃபீலீங்க்ஸை ஷேர் பண்ணேன் அவ்ளோதான் பரவாயில்லை. இந்த நிமிடம் வரை அவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை. இது எல்லாம் வெறும் வாட்ச்அப் உரையாடல் மட்டுமே. அனால் இதற்குப் பின்னால்தான் அவர்கள் இன்னும் இன்னும் அதிகம் உரையாடல்களை தொடர்ந்தனர் இன்னும் இன்னும் மனதிற்கு நெருக்கமான உணர்வு அவளுக்கு, அவனுக்கும் தான். ஒரு காதலர்களைப் போலவே உரையாடல்கள் தொடர்ந்தது இரவெல்லாம். நான் உனக்கு யாரு I Mean என்ன உறவு என்று அடிக்கடி மெசேஜ்ஜில் கேட்பான். “Who am i to you” என்று. இவளும் நீ எனக்கு Boy friend தான் என்பாள் ஒவ்வொரு முறையும். அவனை எவ்வளவு ஆழமாக காதலிக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. பைத்தியக்காரி Boy friend மட்டும்தான் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டாள்.தினமும் ஒரு முறையேனும் கால் செய்து பேசிக் கொள்வார்கள். 

   அப்போது ஒரு நாள் அவனுக்கு கால் செய்த போது, “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” பாடல் காலர் டியூனாக ஒலித்தது. அந்த வரிகளும் அந்த இசையும் அவளை ஏதோ செய்தது, அவள் அப்போதுதான் முதல் முறையாக அந்த பாடலைக் கேட்டாள். அவன் வேறு அந்தப் பாடலை அவளுக்கு ஃபோனில் பாடிக் காட்டுவான், ரொம்ப பிடிக்கும் அந்த வரிகள் என்று கூறுவான். அதுவும் அந்த “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு விரல்கொடு” அந்த வரி மிகவும் பிடிக்கும் என்பான். அவளுக்கும் அந்த வரிகள் மிகவும் பிடித்துப் போனது. தோழியிடமிருந்து அந்த பாடலில் இருந்து சில வரிகளை மட்டும் கட் செய்து ஃபோனில் அனுப்ப சொல்லி வாங்கிக் கொண்டாள். அந்த சில வரிகளை மட்டும் ரிப்பீட் மோடில் வைத்துக் கேட்பாள் இரவெல்லாம். அவனை சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் அவனிடம் கொண்ட காதலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவனுக்கும் இவளை சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் இருந்தது. அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு சின்ன வேலை கிடைத்தது. வெறும் 20 நாட்கள் மட்டும் ஒரு விளம்பர ஷூட்டிங் அசிஸ்டண்ட் டைரக்டராக வேலை. அவள் மேல் படிப்பிற்காக கல்லூரியில் சேர ஆயத்தமாக இருந்ததால், செய்து கொண்டிருந்த வேலையை விட்ட பின் எந்த நிரந்தர வேலையையும் தேடவில்லை. இதுவும் அவளை தேடி வந்த வேலை. மீடியா சம்பந்தமாக படிக்கப் போவதால் நல்ல அனுபவமாக இருக்கும் என்று ஏற்றுக் கொண்டாள்.

       காலை 6 மணிக்கு கிளம்பினால் வீடு திரும்ப இரவு ஏழு ஏழரை மணி ஆகும். வேலை நேரத்தில் ஃபோன் உபயோகப் படுத்த முடியாது. இவனை ரொம்ப மிஸ் பண்ணா, ஞாயிறு ஒரு நாள் மட்டுமே ஷூட்டிங் இல்லை அதனால் ஒரு ஞாயிற்றுக் கிழமை வரச் சொன்னாள் இவளை சந்திக்க. அவனுக்கு சனிக்கிழமை வேலூர் வரை ஏதோ வேலை இருந்தது அதனால் சனிக்கிழமை மாலையோ இரவோ சென்னை வந்துவிட்டு ஞாயிறு ஒரு நாள் முழுவதும் இவளுடன் இருக்கலாம் என்றான். அவளுக்கு அளவில்லா சந்தோசம். சனிக்கிழமை மாலை இவனைச் சந்திக்க சற்று சீக்கிரமாகவே புறப்பட்டு வந்து கொண்டிருந்தாள். மாலை 6 மணி இருக்கும் அவனிடம் இருந்து ஃபோன் வந்தது மிகுந்த சந்தோசத்துடன் எடுத்துப் பேசினாள். ஆனால் அவனோ சென்னைக்கு வரமுடியாது ஒரு அவசர வேலையா ஊருக்கே திரும்ப போயிட்டு இருக்கேன் என்றான். அவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிப் போய் விட்டது சொல்லி இருந்தா 2-3 நேரம் பயணம்தானே நானே கூட வேலூருக்கு வந்து பாத்திருப்பேனே என்றாள். இல்ல எனக்கே இப்போதான் ஃபோன் வந்துச்சு அழாத நான் கண்டிப்பா ரெண்டு மூணு நாள்ல திரும்பி வரேன் என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினான். ஆனால் அவளுக்கு பயம் எங்கே சந்திக்க முடியாமலே போய்விடுமோ என்று. ஏனெனில் அவன் இந்தியாவில் இருக்கப் போகும் கடைசி வாரம் இதுதான். பிறகுஅவன் கண்டிப்பா உன்னைச் சந்திக்காம போக மாட்டேன்னு சத்தியம் செய்து கொடுத்தான், அடுத்த ஒரு நாள் கழித்து ஃபோன் செய்து புதன் அன்று சென்னை வரப்போவதாக சொன்னான். அன்று அவனுக்கு, அவனுடைய சொந்தக்காரப் பையனை வழி அனுப்ப ஏர்ப்போர்ட் வரவேண்டிய வேலை இருந்தது. அவள் முதலில் தன்னை சந்திப்பதற்காக மட்டுமே வரப்போகிறான் என்று நினைத்து மிகவும் உற்சாகமடைந்தாள். இந்த ஒரு நாள் இடைவெளியில் அவளே அவனது சொந்த ஊருக்கு செல்லலாம் என்று கூட நினைத்தாள். சனிக்கிழமை இரவு கிளம்பி ஞாயிறு சந்திக்கலாம் என்று நினைத்தாள்.அன்று இரவு முழுவதும் அதே ”நானே வருகிறேன்” பாடலில் வரும் “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” வரிகளை இரவெல்லாம் தூங்காமல் பைத்தியக்காரியைப் போல கேட்டுக் கொண்டிருந்தாள். பிறகு அவனே ஃபோன் செய்து அதெல்லாம் வேணாம் நானே வரேன் என்று அவளை சமாதானம் செய்தான்.

     அந்த நாளும் வந்தது, அன்றைக்கு என்று பார்த்து அவளுக்கு ஷூட்டிங் முடிய நேரம் ஆனது. அவனுக்கு வர லேட் ஆகும் என்று மட்டும் மெசேஜ் செய்தாள். அவன் இப்போதான் நான் ஏர்போர்டில் இருக்கேன். நீ கிளம்பும்போது சொல்லு எங்கே மீட் பண்ணலாம்னு என்றான். நான் ஷூட்டிங் முடிச்சு வடபழனி வந்து Director office ல என்னோட வண்டி எடுத்துட்டு தான் வரணும். அப்போ ஒண்ணு பண்ணலாம் வடபழனி ஃபோரம் மாலில் சந்திக்கலாம் என்றாள். சரி வடபழனி வந்துட்டு ஃபோன் செய்யறேன் என்றான். மீரா அலுவலகம் வந்து சேர 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. காலையில் இருந்து க்ஷூட்டிங் முகமெல்லாம் வாடிப்போய் தலை கலைந்து இருந்தது. 

      அவனை முதன் முதலில் சந்திக்கப் போகும் போது இப்படியா போவது என்று அவசரமாக தலையை வாரி கைப் பையில் வைத்திருந்த பவுடரை லேசாக போட்டு கண்ணுக்கு மை இட்டு ஓரளவு ஃபிரஷ் ஆனாள். அவனுக்கு ஃபோன் செய்தாள் , ஃபோனை எடுத்தவன் நீ வர ரொம்ப லேட் ஆகிடுச்சு பேசாம நாம நாளைக்கு சந்திக்கலாம் இன்னொரு ஃப்ரண்ட் வேற கூட இருக்காங்க அவங்களும் ரொம்ப நாளா சந்திக்கணும்னு கேட்டுட்டு இருந்தாங்க அதான் என்றான். சரி பரவாயில்லை ஃப்ரண்ட் கூட இருந்தா என்ன இப்ப நீ எங்கே இருக்கன்னு கேட்டாள். அசோக் நகர் போலிஸ் ஸ்டேசன் கிட்டன்னு சொன்னான். மீராவுக்கு ஆச்சர்யம் தாங்கல அந்த அலுவலகத்தில் இருந்து வெறும் பதினைந்து நிமிட தொலைவு, ஆனா ரோட்டுலயா வெச்சு சந்திக்கிறது அலுவலகத்து கிட்டயே வாயேன் என்றாள். இதற்கு மேல் மாலுக்கும் செல்ல முடியாது ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அந்த அலுவலகம் வர்ற வழி கூறினாள். ஆனால் அவன் இருக்கும் இடத்தில் இருந்து இந்த அலுவலகத்திற்கு வர வழி இல்லை. ஒன் வே, சுத்திட்டு வர்றது ரொம்ப கஷ்டம். சரி அப்போ வடபழனி சிக்னல் கிட்டதான திரும்ப முடியாது அங்கேயே வண்டிய நிறுத்திட்டு (நண்பரின் வண்டியில் இருவரும் வந்திருந்தார்கள்). “லக்ஷ்மண் ஸ்ருதி”க்கு வந்துடு. அது சிக்னல் கார்னர் பில்டிங் பெரிய கடை அங்கே மீட் பண்ணலாம்னு சொல்லி அவசரமா ஃபோனை வெச்சுட்டு தன்னோட வண்டியை எடுத்துட்டு கிளம்பினாள். 10 நிமிட தொலைவு கூட இல்லை அந்த இடம். அவனை முதன் முதலில் சந்திக்கப் போவதை நினைத்து அவளுக்கு நெஞ்செல்லாம் படபடத்தது. அவ்வளவு சோர்வும் காணாமல் போய் உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது.

   ஆனால் சரியான டிராஃபிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவளது பொறுமையை மிகவும் சோதித்தது. அவனை சந்திக்கப் போகும் அந்த “லக்ஷ்மண் ஸ்ருதி” பில்டிங் கண்ணுக்கு எட்டிய தொலைவில் வந்துவிட்டது. பறக்க நினைத்த அவளால் நகரக்கூட முடியவில்லை. அவ்வளவு ட்ராஃபிக். அப்படியே வண்டியை நடு ரோட்டில் விட்டுவிட்டு ஓடி அந்தக் கடைக்குள் சென்று விடலாம் போல் இருந்தது அவளுக்கு. அவனை சந்திக்க இத்தனை நாட்களை அவள் கடந்ததை விட இந்த சில நிமிடங்களை கடக்க அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவ்வளவு ட்ராபிக் ஹார்ன் சத்தத்திலும் அவளுக்கு மட்டும் “நானே வருகிறேன்” பாடல் பின்னணியில் ஒலித்தது. 10 நொடியில் வரவேண்டிய இடத்திற்கு 20 நிமிடங்கள் ஆனது. அந்த தருணங்களை அவளால் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது. ஒரு வழியாக அந்த இடத்தை அடைந்து வண்டியை பார்க் செய்து விட்டு முதல் தளத்தில் உள்ள அந்த கடைக்குள் அவள் கால்கள் சென்றது. அவள் கண்கள் அவனைத் 
தேடியது. அவனிடம் இருந்து ஃபோன் ”இதோ ரெண்டு நிமிசத்துல வரேன். நீ கடைக்குள்ள போனதைப் பாத்துட்டேன்” என்றான். அவள் சும்மா அந்தக் கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கடை முழுவதும் இசை சம்பந்தப் பட்ட பொருட்கள் நிறைந்து இருந்தது. ஆடியோ சிடி, வீடியோ சிடி, இசைக் கருவிகள், இன்னும் பல.அவன் படி ஏறி உள்ளே நுழைந்தான். 

      அவர்களுடைய முதல் சந்திப்பு, இசை சங்கமிக்கும் இடத்தில் இரு இதயங்களின் சந்திப்பு. அவளுக்கு அவனைக் கண்டதும் ஓடிச் சென்று கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. நெருங்கிச் சென்று கை கொடுத்து வரவேற்றாள். இவளைக் கண்டதும் ”என்னடி இப்படி வெள்ளை வெளேர்னு இருக்க. நீ எல்லாம் எங்க ஊரு பக்கம் வந்தா எல்லாரும் உன்னையே தான் பார்ப்பாங்க” என்றான் சிரித்துக் கொண்டே. “ஏய் என் கலரே இதுதான். ஏன் இப்படி போதும் போதும்” என்றாள் வெட்கப் பட்டுக் கொண்டே. அட சென்னைப் பொண்ணுக்கு வெட்கப் படலாம் தெரியுமா? என்றான் கிண்டலாக. அவனை செல்லமாக முறைத்தாள். முறைத்துக் கொண்டே ரசித்தாள். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 6 அடி உயரம் கொஞ்சம் கருமையான தேகம். கள்ளச் சிரிப்பு, குறு குறுப் பார்வை. அவனை முதன் முறையாக இப்போதுதான் இவ்வளவு நெருக்கத்தில் சந்திக்கிறாள்.அவன் பையில் இருந்து அவனுடைய கவிதை தொகுப்பு புத்தகத்தை எடுத்து ப்ரியமுடன் என்று எழுதி கையெழுத்துப் போட்டு அவளிடம் கொடுத்தான். காதல் கவிதை தொகுப்பு அது. அவனது கை எழுத்தின் மேல் முத்தம் கொடுத்து கொடுக்கச் சொல்லி சின்னக் குழந்தை போல் அடம்பிடித்தாள். ஏய் யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க நீ வா ஏதாவது வாங்கலாம் என்று "சிடி"க்கள் இருந்த இடத்திற்கு நகர்ந்தான். சிரித்துக் கொண்டே அவளும் அவனுடன் சென்றாள். இருவருக்கும் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் தொகுப்பு பகுதியில் நின்றார்கள். எந்த சிடியை வாங்கலாம் என்று தேடினார்கள். அவள், ஏய் ஏ.ஆர்.ரஹ்மான் லவ் சாங்ஸ் வாங்கலாமே என்றாள் சிறு பிள்ளை போல. அவன் சிரித்துக் கொண்டே, செல்லமாக முறைத்துக் கொண்டே அதே சிடியை வாங்கி அவளுக்கு பரிசளித்தான். சரி நா கிளம்புறேன் வெளிய ஃப்ரண்ட் வெயிட் பண்றாங்க என்றான். என்ன வந்த உடனே கிளம்புற அதெல்லாம் முடியாது நாம ஒண்ணா சாப்பிட்டாச்சும் கிளம்பலாம் என்று அடம்பிடித்தாள். சரி என்று கீழே இறங்கி வண்டியை எடுத்துக் கொண்டு எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த அவனுடைய ஃப்ரண்டிடம் சென்றார்கள். 35-36 வயதை ஒத்த பெண்மணி அவங்களும் இவனுடைய ஊர்க் காரங்களாம், இவனுடைய எழுத்துக்கு ஃபேன் என்று சொல்லி அறிமுகப் படுத்தி வைத்தான். பிறகு பக்கத்தில் எங்கு ஹோட்டல் உள்ளது என்று விசாரித்துச் சென்றார்கள். கீழே ஒரே கூட்டம் அதனால் மேலே சென்றார்கள். மேலே பஃபே மட்டும்தான் என்றார்கள், சரி பரவாயில்லை என்று மூன்று பேரும் உள்ளே சென்று கை கழுவ சென்றார்கள். அவனுடைய ஃபிரண்ட் முதலில் கை கழுவி விட்டு போய் உட்கார்ந்து விட்டார். அந்த இடத்தில் கூட இருவருக்கும் காதல், ஒருவரை ஒருவர் பார்ப்பதும் ரசிப்பதுமாக கண்ணாலேயே பேசிக் கொண்டார்கள். அங்கு அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுக்கு முத்தம் கொடுக்கப் பிரியப் பட்டாள். அவனுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. யாரேனும் பார்த்து விடுவார்கள் என்று இருவரும் வெட்கப் பட்டு சிரித்துக் கொண்டே வந்து விட்டார்கள். அவரவர்களுக்கு வேண்டியதை தட்டில் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தார்கள். அவளும் அவனும் அருகருகில் அவனுடைய ஃபிரண்ட் அவர்களுக்கு எதிரில். அவன் அவளை சீண்டுவதும், இவள் அவனை முறைக்க முடியாமல் முறைப்பதுமாக ஒரு ரகசிய காதல் அரங்கேறியது. அவனுடைய ஃப்ரண்டுக்கு எதிரிலேயே. பழங்கள் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்திருந்தான் சாப்பிட்டு முடித்து சாப்பிட, இவள் சாப்பிட்டு முடித்த விட்டு அவன் பழங்களை சாப்பிட்ட அதே தட்டில் அவளுக்கும் பழங்கள் எடுத்து வர நினைத்தாள். அவள் கை கழுவி விட்டு வருவதற்குள் அந்த வீணாய் போன சர்வர் அந்த தட்டை எடுத்துச் சென்று விட்டான். அவளுக்கு மிகுந்த ஏமாற்றமாய் போய் விட்டது. உனக்கென்னடா அவ்ளோ அவசரம் என்று அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். அங்கு பழங்களும் தீர்ந்து போய்விட்டது. நீ சரியாவே சாப்பிடல ஒரு தோசை சொல்றேன் என்றான் . அய்யோ ஒரு முழு தோசை என்னால சாப்பிட முடியாது என்றாள். சரி ஆளுக்குப் பாதி சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்தார்கள். அவள் ஆசைப்பட்ட படியே அவனும் அவளும் ஒரே தட்டில் ஒரே தோசையை ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்து சாப்பிட்டார்கள். அவளுடைய அந்த அர்ப்பத்தனமான ஆசை நிறைவேறியது.

      அவளது சின்னஞ்சிறு விரலை அவனுடைய சின்னஞ்சிறு விரலில் கோர்த்து அவனைக் காதலோடு பார்த்தாள். கண்ணோடு கண் பார்த்தும் அந்த மக்குப் பயலுக்குப் புரியவே இல்லை. எந்தக் காரணத்துக்காக அவள், அவனது சுண்டு விரலை அவளது சுண்டு விரலால் பற்றினாள் என்று. அவளுக்கு மட்டும் “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே!! சின்னஞ்சிறு சின்னஞ்சிறு விரல் கொடு” பாடல் வரிகள் ரகசியமாய் ஒலித்துக் கொண்டு இருந்தது பின்னணியில். மணி 9.30 ஆகியதால் வேறு வழி இல்லாமல் கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பினார்கள். அவனுடைய தோழி முன்னால் படி இறங்கிவிட்டார்கள். இவர்கள் பொறுமையாக நடந்து வந்தனர். அவன் அவளைக் குறுகுறுவென பார்த்து என்னோட ஹய்ட்டுக்கு கரெக்டா பொருத்தமா என்னோட வாழ்க்கைல வந்த முதல் பொண்ணு நீதாண்டி என்று சிரித்தபடி கூறி அவளது தோளில் கையைப் போட்டு இருவரும் ஒன்றாகப் படி இறங்கினார்கள். ஏன்டா நான் ஏன் உன்னோட சுண்டு விரலை என்னோட சுண்டு விரலால பிடிச்சேன்னு புரிஞ்சதா? என்றாள். “ஆமா எதுக்கு” என்று கேட்டான். அவனை முறைத்தவாறே போடா லூசு உன்னை வச்சு ஒரு லவ்கூட உருப்படியா பண்ணமுடியாது. “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு விரல் கொடு” வரி அதுக்குள்ள மறந்து போச்சா? என்றாள். “ஓ அதானா” என்று உற்சாகமாகி சட்டென்று அவளது கன்னத்தைக் கடித்து வைத்தான். அவள் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. முதல் முத்தத்தைப் பெறும் முன்பே, முதல் செல்லக் கடியைப் பெற்றுக் கொண்டாள் அவனிடமிருந்து. அவளும் சட்டென்று எட்டி அவனது கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தம் கொடுத்தாள் வெட்கப்பட்டுக் கொண்டே. என்னடி ஒரு சின்னக் குழந்தைக்கு கொடுக்குற மாதிரி கொடுக்குற என்று அவளைக் கிண்டலடித்து வம்பிழுத்தான். சீ போடா என்று வெட்கப்பட்டுக் கொண்டே படி இறங்கினாள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டே. இவையனைத்தும் ஒரு சில நொடிகளில் அரங்கேறியது. நாளைக்கு பாரு உன் உதட்டை கடிச்சு வெக்குறேன், நாளைக்கு இருக்கு உனக்கு என்று கூறி சிரித்துக்கொண்டே பார்க்கிங் நோக்கி நடந்தான். அதன்பின் அவன் ஒரு ரூம் எடுத்துத் தங்க முடிவு செய்து விட்டு ஃப்ரண்டுடன் வண்டியில் கிளம்பினான். அவளும் கிளம்பினாள் அளவில்லா சந்தோஷத்துடன். அவனைப் பிரிய மனமில்லாமல் வீடு நோக்கி வண்டியை செலுத்தினாள். வீட்டிற்கு வந்ததும் அவனுக்கு போன் செய்து, ”நாளைக்கு என்ன கலர் டிரஸ் போடட்டும்”னு கேட்டு சரி உனக்கு புடிச்ச கருப்பு கலர்ல குர்த்தா ஒண்ணு இருக்கு அதையே போட்டுக்குறேன். என்று அவளே முடிவு செய்தாள். 

   அடுத்த நாள் அவளுக்கு காலேஜ் அட்மிஷன்க்கு இண்டர்வியூ இருப்பதால் ஒரு நாள் லீவு கேட்டு இருந்தாள் ஏற்கனவே. அதனால் நாளை அவளுக்கு ஷூட்டிங் போகும் வேலை இல்லை. நாள் முழுவதும் இவனுடன் இருக்கப் போவதை நினைத்து அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு. இரவோடு இரவாக அந்தக் கவிதை புத்தகத்தை படித்து முடித்தாள். பிறகு அதைக் கட்டிப் பிடித்தவாறே தூங்கிப் போனாள் "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே" பாடலைக் கேட்டபடியே. காலையில் நேராக காலேஜூக்கே வரச் சொன்னாள் அவனை. அவனும் வந்துவிட்டான். பாவம் அவள் இண்டர்வியூ முடிந்து வரும் வரை அம்போவென்று தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு துணையாக இருந்தது அவனது ஃபோனும் அதில் உள்ள பாடல்கள் மட்டுமே. அவளது வரிசை எண் அழைப்புக்காக காத்திருந்த நேரத்தில் அவ்வப்போது ஓடியோடி வந்து இவனைப் பார்த்து விட்டுச் சென்றாள் ஒரு பட்டாம்பூச்சியைப் போல. அதன் பின் அவளுக்கு முந்தைய வரிசை எண் பொண்ணை ஃப்ரண்ட் பிடித்து நம்பர் வாங்கி இவளது எண்ணைக் கூப்பிடும் போது கால் செய்யும் படிக் கேட்டுக்கொண்டு இவனிடத்தில் ஓடி வந்தாள். அச்சோ வர அவசரத்துல சின்ன வயசு போட்டோ ஆல்பத்தை எடுத்துட்டு வர மறந்துட்டேன். அதை உன்கிட்ட காமிக்க நினைச்சேன் என்றாள். அடச்சே உன்னோட கவிதைப் புத்தகத்தையும் எடுத்துவர மறந்துட்டேன். நைட்டே முழுசா படிச்சு முடிச்சுட்டேன். அதுல எந்த எந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னு காமிக்க நினைச்சேன் என்றாள். 

    கண்கள் விரிய, கைகள் படபடக்க பேசிக் கொண்டிருந்தாள் ஒரு சிறு குழந்தையின் உற்சாக மனநிலையுடன். அவ்வளவுதான இரு என்கிட்ட இன்னொரு புக் இருக்கு என்று பையில் இருந்து எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் அதைப் பிரித்து எந்தெந்த கவிதைகள் மிகவும் பிடித்தது, எந்தெந்த வரிகள் ஈர்த்தது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். புரியாத வரிகளுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள். தோழியிடமிருந்து அழைப்பு வந்தது அடுத்து இவளது எண்ணைத்தான் அழைக்கப் போகிறார்கள் என்று. அதெப்படி வந்த ஒரே நாள்ல ஃப்ரண்ட் புடிச்சு நம்பர் வாங்கிட்டு வந்த என்றான் ஆச்சரியமாக. இதுல என்ன இருக்கு எல்லாம் ஒரே காலேஜ்ல ஒரே கிளாஸ்லதானே படிக்கப் போறோம் என்று கண்களை சிமிட்டி விட்டு ஓடி விட்டாள். இண்டர்வியூ முடிந்து சரி இப்ப எங்க போலாம் நான் இன்னும் காலைல இருந்து சாப்பிடல கேண்டீன் போலாமா இல்ல பக்கத்துல இருக்குற மால்க்கு போலாமா என்றாள். வா மாலுக்கே போலாம் என்று கிளம்பினார்கள். அங்கு ஹோட்டல் எதுவும் இல்லை. “காஃபி ஷாப்” மட்டுமே இருந்தது. அங்கேயே போனார்கள். இவள் தனக்கு ரஸமலாய் மில்க் ஷேக் வேண்டும் என்றாள். அவனும் தனக்கு அதுதான் ஃபேவரைட் என்று அதையே ஆர்டர் செய்தான். பார்த்தியா ஃபுட் விஷயத்துலகூட நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட் என்றாள் கண்களை சிமிட்டியபடி சிரித்துக் கொண்டே. அவன் அவளை சிரித்துக் கொண்டே முறைத்தான் முறைத்துக் கொண்டே ரசித்தான். ஆமா ஏன் இவ்வளவு பெரிய பொட்டு வச்சிருக்க என்றான். உடனே அவள் உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு தான் கையோட சின்ன பொட்டையும் எடுத்துட்டு வந்திருக்கேன் என்று கைப்பையில் இருந்து அந்த பொட்டை எடுத்தாள். வைத்திருந்த பொட்டை எடுத்து அதிலேயே ஒட்டிவிட்டு கண்ணாடி எடுத்துட்டு வரலை ஒரு பொட்டை எடுத்து வச்சி விடு என்றாள். ஏய் அதெல்லாம் வேணாம் அப்போ நீ அதை வேற மாதிரி நினைச்சுப்ப என்றான். ஆனால் அவள் விடுவதாக இல்லை. அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது, அவள் அடம்பிடிப்பதைப் பார்த்து “பாரேன் நீ பொட்டு இல்லாம கூட அழகாத்தான் இருக்க Future ல இப்படித்தான் பொட்டு வச்சிக்காம தலைல ஷால் போட்டுட்டு இப்படியே என்கூட இருக்கப் போற” என்றான். அந்த வார்த்தைகள் அவளுக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவன் அவளை ஏற்றுக் கொள்வான் தன்னுடைய காதலை ஏற்று, கரம்பிடிப்பான் என்று நினைத்தாள். நேற்று அவன் நடந்துகொண்ட விதமும் அப்படித்தான் இருந்தது. பிறகு அவனே அந்த சிறிய கறுப்பு நிற பொட்டை எடுத்து வைத்து விட்டான். அவளுக்குள் பல வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.

     பொறுமையாக மில்க் ஷேக்கைக் குடித்தனர். அவளுக்கு ஒரு ஃபோன் வந்தது. அதில் பேசியவர்கள் ஏதோ ஒரு கூப்பன் அவள் ஜெயித்து இருப்பதாகவும், 3 நாள் கோவா, கேரளா எங்காவது இலவசப் பயணம் சென்று வரலாம் உங்க கணவரோட வந்து பரிசை வாங்கிக்கோங்க என்று அலுவலக முகவரியைக் கூறினார்கள். அந்த அலுவலகம் அந்த மாலிலேயே இருந்தது. அவளுக்கு ஆச்சரியம் தாங்க முடியல. போனை வைத்துவிட்டு வெட்கப் பட்டு சிரித்துக்கொண்டே அவனிடம், “வரியா போய் ஹஸ்பண்ட் வைஃப்னு சொல்லி பரிசுக்கூப்பனை வாங்கிட்டு ஹனிமூன் போலாம்” என்றாள் கண்களை சிமிட்டியப்படி. அவன் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தான். அடச்சீய் சும்மா சொன்னேன்டா, ஐடி ப்ரூஃப் கேப்பாங்க அதுமட்டுமில்லாம இன்னும் ரெண்டு நாள்ல நீ நாட்டை விட்டே கிளம்ப போற என்று சொல்லி சிரித்தாள்.

     அதன்பின் இருவருக்குமே ஃபோன் வந்தது. அவளுக்கு அந்த டைரக்டர் எதோ வேலை சொன்னார். அவளால் மறுக்க முடியவில்லை. அவனுக்கும் அவனுடைய ஃப்ரண்டிடம் இருந்து அழைப்பு. இருவரும் கிளம்பினார்கள். படி இறங்கி வரும் வழியில் அவளுக்கு பரிசுக்கூப்பன் அளிக்க ஃபோன் செய்த அலுவலகத்தைக் காண்பித்து வர்றியா போலாம் என்றாள் கண்களை சிமிட்டி சிரித்துக் கொண்டே. அங்கு சில நிமிடங்கள் நின்றுப் பேசினார்கள். ஏய் நான் உனக்கு சரியா வருவேனாடி. இதெல்லாம் ஒத்துவருமா என்றான். கொஞ்சம் சந்தேகத்தோடும், கொஞ்சம் ஆசையோடும். அதெல்லாம் சரியாத்தான் வரும் என்றாள்  நம்பிக்கையோடு. இருவரும் ஆளுக்கொரு திசையில் கிளம்பினர். வேலை முடித்து அவனுக்கு ஃபோன் செய்யும் போது 2.30 மணி இருக்கும். அவனுக்கும் போன வேலை முடிந்துவிட்டது. மைலாப்பூரில் இருப்பதாக கூறினான். சரி நான் வந்து பிக் அப் பண்ணிக்குறேன்  இங்கிருந்து மைலாப்பூர் கிட்டதான் என்று சொல்லி ஃபோனைக் கட் செய்து மைலாப்பூர் எப்படி போக வேண்டும் என்று வழி விசாரித்து போய் சேர்ந்தாள். அவன் சில வருடங்கள் முன் வேலை பார்த்த அலுவலகத்தில் ஒரு நபரைப் பார்க்க வேண்டும் என்றான். சரி நீயே வண்டி ஓட்டு நான் பின்னாடி உட்கார்ந்துக்குறேன் என்று வண்டியை அவனிடம் கொடுத்து விட்டு பின்னாடி அமர்ந்து கொண்டாள். அதன் பின் வழி தவறி அடையார் பக்கம் போய்விட்டார்கள். சரி அந்த அலுவலக நண்பரும் ஃபோன் எடுக்கல இங்க எங்கே போகலாம் என்றான். இங்க கிண்டி பார்க் தான் இருக்கு என்று அங்கு சென்றார்கள். அங்க போனா அவளுக்கு ஒரே ஷாக், சில தினங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமைதான் அவளுடைய தோழியுடன் வந்திருந்தாள். பல வருடங்கள் கழித்து அந்த பார்க், அன்னிக்கு அவ்ளோ டீசண்டா நிறைய குடும்பங்கள் குழந்தைகளோட நிரம்பி இருந்த பார்க்குல இன்னிக்கு எங்க பார்த்தாலும் காதல் ஜோடி ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக் கொண்டிருந்தனர். அதுவும் வெட்ட வெளியில் யார் பார்த்தால் எங்களுக்கு என்ன என்றவாறு. அன்று சனிக்கிழமை என்பதால் குடும்பங்களாக வந்திருந்தார்கள். இன்று வியாழக்கிழமை குடும்பத்துடன் யாரும் வரமாட்டார்கள் என்று காதல் ஜோடிகளால் நிரம்பி இருந்தது அந்தப் பூங்கா. அது இருவருக்குமே பிடிக்கவில்லை. என்னதான் காதலித்தாலும் இப்படியா பப்ளிக்கா யார் பார்த்தா எங்களுக்கென்ன என்று காதலிப்பாங்க என்று கூறினார்கள். இதிலும் இருவருக்குமே ஒத்த சிந்தனை ஒத்த ரசனை. கூட்டமாக இருக்கும் இடத்தில் அவளது கைப்பிடித்து நடக்கவே கூச்சப்பட்டான். பார்ப்பவர்கள் நம்மையும் இந்த மாதிரி லவ்வர்ஸ்னு தப்பா நினைப்பாங்க என்றான். பின் அவனுடைய ரயிலுக்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால் அந்தப் பூங்காவையே சுற்றி வந்தனர். அங்குள்ள கூண்டில் உள்ள மிருகங்களையும் பறவைகளையும் வேடிக்கை பார்த்தவாறே. பின் ரொம்ப தூரம் நடந்ததால் ஒரு மரத்தை ஒட்டி உள்ள மேடையில் அமர்ந்தார்கள். நிறைய பேசினார்கள். 

       உனக்கு Girl baby பிடிக்குமா Boy baby பிடிக்குமா என்று கேட்டாள். பொண்ணு தான் ரொம்ப பிடிக்கும் என்றான். பாத்தியா இதுலயும் நம்ம ரெண்டுப் பேருக்கும் ஒரே ரசனை. நம்ம ரெண்டுப்  பேருக்கும் பொண்ணு பொறந்தா நம்ம ரெண்டு பேரு பேரயும் சேர்த்து "சமீரா" ன்னு  வைக்கலாம் என்றாள் அவனை குறு குறுவென்று பார்த்தவாரே. அவன் நீ மட்டும் என்னை விட நாலு வயசு சின்ன புள்ளையா இருந்தா உன்னைத் தூக்கிட்டு போய் தாலி கட்டியிருப்பேன் என்றான். அப்போ உனக்கு என்னோட வயசுதான் பிரச்சனையா என்றாள் உடைந்த குரலில். இல்ல அப்படி இல்ல எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சனையும் இல்ல ஆனா எங்க ஃபேமிலி, இந்த சொஸைட்டி எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது என்று ஏதேதோ சமாதானம் சொன்னான். அவளது முகம் வாடிப்போனதை பார்த்து ஆனா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் கல்யாணம் தான் செஞ்சுக்க முடியாத சூழ்நிலை அப்படின்னு சொல்லி, கிட்ட வந்து முத்தமிட எத்தனித்தான். ஒரே ஒரு முத்தம் கொடுத்துக் கொள்கிறேனே என்று அனுமதி கேட்டான். அதெல்லாம் முடியாது கல்யாணம் பண்றேன்னு சொல்லு அதுக்கப்பறம் முத்தம் கொடு என்றாள். அதென்னடி கணக்கு நீ எனக்கு கன்னத்துல முத்தம் கொடுக்கலாம் நானும் உனக்கு கொடுக்கலாம் ஆனா உதட்டு முத்தம் மட்டும் கொடுக்கக் கூடாதா என்றான். ஆமா ஃப்ரண்ட்லியா ஹக் பண்ணலாம், கன்னத்துலயோ நெத்திலயோ முத்தம் கொடுக்கலாம் அது தப்பில்ல. ஆனா இது தப்பு என்றாள். ஆமா நாம சந்திக்குறப்போ ஹக் பண்ணுவேன்னு நீயும் பல தடவை சொல்லி இருக்க நானும் பலதடவை சொல்லியிருக்கேன். ஆனா இன்னும் ஒரு தடவை கூட ஹக் பண்ணலை என்றாள் வருத்தமாக. சரி இப்ப ஹக் பண்ணலாம் என்றான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவனது கால்களின் மீது அவளது கால்களை வைத்து அவன் கைபிடித்து அவன் கால்களின் மீதேறி அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனை கண்ணோடு கண் பார்த்தாள். அவனிடம் இருந்து முத்தத்தைப் பெற்றுக் கொள்ளவும் பகிர்ந்துக் கொள்ளவும் அவளுக்கும் ஆசைதான் ஏன் அவனுக்கும் ஆசைதான். ஆனால் அது எதுவும் அரங்கேறாமல் நொடிப் பொழுதில் அரங்கேறிய காட்சி நொடிப்பொழுதில் முடிந்தும் போனது. 

   அதன்பின் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். அவளுக்கு இப்போதும் நம்பிக்கை இருந்தது. அவனுடன் திருமணம் நடைபெறும் என்று அதனால்தான் தன் காதலை வார்த்தையால் சொல்லிப் புரிய வைப்பதை விட சைகையால் சொல்லி புரிய வைக்க முடியும் என்று நம்பினாள். அதனாலேயே குறைந்த பட்சம் கன்னத்திலாவது முத்தம் கொடுக்க அனுமதி கொடுத்தாள். பிறகு அங்கிருந்து கிளம்பி எக்மோர் ரயில் நிலையம் நோக்கி வண்டியை செலுத்தினார்கள். அந்த ஏரியா பீச் ரோடு போல அமைதியாக விசாலமான சாலைகளைக் கொண்டிருந்தது. அந்த மாலைப் பொழுதும் சுற்றி இருந்த மரங்களும். சில்லென்ற காற்றும் ஒரு ரம்மியமான சூழ்நிலையாக அமைந்தது. அவனருகில் சற்று நெருக்கமாக அமர்ந்து அவனை கட்டிக் கொண்டாள் மிகுந்த தயக்கத்துடன். அந்த பயணத்தின் இடையே அவன் பலமுறை அவளிடம் ஐ லவ் யூ என்றான். அவளும் பதிலுக்கு சொல்லிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்த படி பயணித்தாள் அவனுடன் அந்த ஏரியாவை கடந்த பின் டிராஃபிக்கான பகுதி வந்துவிட்டது. அவள் இயல்பு நிலைக்கு திரும்பி தள்ளி உட்கார்ந்து கொண்டாள். பின் ரயில் நிலையத்தை அடைந்து டிக்கெட் வாங்கினார்கள். 7 மணி வாக்கில் ரயில் புறப்படும். மணி 5.30 ஐ த்தாண்டி இருந்தது. இருவரும் கைகோர்த்து ரயில் நிலையத்தை ஒரு சுற்று சுற்றி வந்தார்கள். அப்போது அவள் ஏன்டா இப்போ நீ என் கையைப் பிடிச்சுட்டு நடக்குறதை மத்தவங்க பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களா என்றாள். இல்லை அது வேற இது வேற பார்க்குல சும்மா கை பிடிச்சுட்டு நடந்தாலே அங்க இருந்த மத்த லவ்வர்ஸ் மாதிரிதான் நம்மளையும் தப்பா பாப்பாங்க. 
ஆனா இங்க அப்படி இல்லை வழி அனுப்பி வைக்க வர்ற நிறைய பேர் கையைப் பிடிச்சுட்டு நடப்பாங்க. அவங்க காதலர்களாகத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை என்றான். அதற்குள் ஒரு சுற்று சுற்றி துவங்கிய இடத்தையே அடைந்தார்கள். அவனது வீட்டிற்கு போன் செய்து டிக்கெட் வாங்கியாச்சு இரவு ரயில் ஏறி காலை வந்து விடுவேன் என்று கூற,வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தான்.அவள் அவனையே பார்த்துக் கொண்டு அவன் பேசுவதையே ரசித்துக் கொண்டிருந்தாள். ஒத்த சிந்தனை, ஒரே விதமான ரசனை, இவளுடைய விருப்பப்படியே அவனுடைய குணாதிசயங்கள் அவனது உயரம் இது அனைத்தும் அவளை, அவனை மேலும் மேலும் காதலிக்கச் செய்தது. மறுபடியும் வண்டியை எடுத்துக் கொண்டு எக்மோரைச் சுற்றி வரலாம் என்று புறப்பட்டார்கள். சுற்றி வந்தபின் ஒரு ஜூஸ் ஷாப்புக்கு சென்றார்கள். மெனு கார்டை அவளிடம் நீட்டி உனக்கு என்ன வேணுமோ சொல்லு என்றான். அவள் அதை வாங்கிப் பார்த்துவிட்டு எனக்கு எது சொல்றதுன்னே தெரியலை அதனால எனக்கும் சேர்த்து நீயே ஆர்டர் பண்ணு என்று மெனு கார்டை அவனிடமே நீட்டினாள். அவன் வாங்கிப் பார்த்துவிட்டு 2 வெண்ணிலா மில்க் ஷேக் வித் ஐஸ் கிரீம் 2 ஃப்ரூட் சாலட் ஆர்டர் செய்தான். அது வரும் வரையில் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவள்  ரொம்ப எமோஷனலாகி அழ ஆரம்பித்துவிட்டாள் என்னை விட்டுட்டு போகாதடா என்று அழுதாள். என்னை பத்தரமா உன்ன தவிர வேற யாரும் இவ்வளவு புரிஞ்சு பாத்துக்க முடியாது என்றாள். அவன் அவள் கைகளைப் பற்றி மொதல்ல கண்ணை தொட அழறத நிறுத்து இப்ப நான் எங்கே போறேன். ஊருக்குத் தான திரும்ப வருவேன். உன்னோட வாழ்க்கை பூரா எப்பவும் உன்கூட இருப்பேன். ஒரு நண்பனாவாது இருப்பேன்னு வாக்குறுதி தந்தான். இனிமே நீ எப்பவும் அழமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு என்றான். தைரியமா இருக்கணும்.  இப்படிலாம் இருக்கக்கூடாது. அழக்கூடாது. ஊருக்கு போய் உனக்கு சில புக்ஸ் அனுப்பறேன் அதெல்லாம் படி என்றான். அதற்குள் வெண்ணிலா மில்க் ஷேக்கும் ஃப்ரூட் சாலட்டும் வந்துவிட்டது. அவள் அந்த மில்க் ஷேக்கின் மேல் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து ப்ரூட் சாலட்டில் கலந்து சாப்பிட சென்றாள். அட நானும் இப்படித்தான் சாப்பிடுவேன் என்றான் அவன். நான்  செய்ய நினைச்சேன் அதுக்குள்ள நீ செஞ்சுட்ட எனச் சொல்லி ஆச்சர்யப் பட்டான். மறுபடியும் ஒரே விதமான ரசனை உள்ளதை சொல்லி ஆச்சரியப் பட்டாள். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் இருவரும் அன்யோன்யமான தம்பதிகளாக "Made for each other" ஆக இருக்க முடியும்னு சொன்னாள்.

      இப்போதும் அவன் என்றாவது ஒரு நாள் இவளுடைய காதலை ஏற்றுக் கொள்வான் என்று நினைத்தாள். அவனை நேரில் சந்திக்கும் முன்பு இத்தனை நம்பிக்கையும் இத்தனை காதலும் அவளுக்கு இல்லை. அவன் மேல் இத்தனை காதல் உள்ளதை அவளே உணரவில்லை. அவன் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறும்போது கூட அவன் ப்ராக்டிகலாக சொல்றதும் சரி என்று நினைத்தாள். ஆனால் அவனை நேரில் சந்தித்த பின் அவனை காதலனாக அல்ல, கணவனாகவே பார்க்க துவங்கிவிட்டாள். அவன் மீது அளவு கடந்த அன்பை அவள் அறியாமலே வைத்து விட்டாள். ரயிலுக்கு நேரம் ஆனதால் இருவரும் ரயில் நிலையம் நோக்கி பயணித்தார்கள். ரயில் தயாராக இருந்தது. இன்னும் 15 நிமிடத்தில் புறப்பட்டு விடும். அவனிடம் பேசத் துவங்கினாள். ப்ராக்டிகல் திங்கிங்குற பேர்ல உன்னை நீயே ஏமாத்திக்காத. உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்னு எனக்குத் தெரியும். நீயும் என்னை லவ் பண்ற ஆனா அதை வலுக்கட்டாயமா மறைக்குற. இப்ப என்ன உனக்காக நான் வேணா மதம் மாறிக்குறேன். எனக்கு உன் கூட இருக்குறதுதான் முக்கியம் அது தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல என்று எவ்வளவோ சொல்லி அவனுக்கு புரியவைக்க நினைத்தாள். 

     அவளைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதற்கு அவனிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தது, அவளை சமாதானம் செய்வதற்கு. ஆனால் அவளை திருமணம் செய்துகொள்ள ஏனோ அவனுக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. அவளின் காதல் தப்பா, காதலித்த விதம் தப்பா, காதலித்த நபர் தப்பா?, அவள் காதலித்ததே தப்பா இல்லை மொத்தமாக காதலே தப்பா என்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனால் மட்டும் ஏனோ அந்த சமாதான வார்த்தைகளை அவளுடைய முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியவில்லை. அவளது கண்களை அவனால் ஏறெடுத்தும் பார்த்து பேச முடியவில்லை. அவளுக்கோ அவன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்வது கூட கவலையாக இல்லை இன்னும் சில நிமிடங்களில் விட்டு பிரிந்து சென்று விடுவான் என்பது மட்டுமே பெரிய கவலை. அவளுக்கு எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.அவளுடைய காதல் கைக்கூடும் என்று பைத்தியகாரத்தனமான நம்பிக்கை அவளுக்கு. அந்த நொடி அவன் அவளை விட்டுப் பிரிந்து செல்லக் கூடாது. நிமிடங்கள் எல்லாம் நொடிகளாக கடந்துச் சென்றது. அவனும் அவள் வாழ்வில் இருந்து கடந்து சென்று விடுவான் என்பதை அறியாமல் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவனை, கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டும் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருந்தாள். உன்ன பாக்கும் போது எனக்கு என்ன பாட்டு நியாபகம் வருது தெரியுமா? உனக்கு இருவது எனக்குப் பதினெட்டு படம். இந்த பட டைட்டில அப்படியே நமக்கு அப்ளை பண்ணிக்கலாம் எனக்கு 20 உனக்கு 18, என்ன விட நீ 2 வருஷம் சின்னப் பையன்ல என்னு சொல்லி சிரித்து விட்டு இந்த படத்துல ஒரு பாட்டு வருமே "ஆறடி உயரம் அழகிய புருவம் ஆப்பிள் போலே இருப்பானே" அந்த பாட்டு தான் நியாபகம் வருது என்றாள். என்ன பாத்தா உனக்கு ஆப்பிள் மாதிரியா இருக்கு நானே சப்போட்டா கலர்ல இருக்கேன் என்றான்.

     ஏய் ஆக்ச்சுவலி எனக்கு ஆப்பிள் பிடிக்காது சப்போட்டா தான் பிடிக்கும் எப்போ ஜூஸ் ஷாப்க்கு போனாலும் சப்போட்டா மில்க் ஷேக் தான் குடிப்பேன் என்றாள் கண்களைச் சிமிட்டியபடி சிரித்துக் கொண்டே. ரயில் புறப்படும் நேரம் வந்துவிட்டது. சட்டென்று எதிர் பாராத நேரத்தில் அவளை அணைத்து முத்தமிட்டு விடை பெற்றுச் சென்றான். அவன் பிரிந்து செல்லும் அந்த நேரத்தில் இதற்காக அவனை கோபித்துக் கொள்ள முடியவில்லை அவளால். அவளுக்கும் அந்த முத்தம் பிடித்தே இருந்தது. அதுவே அவனுடைய கடைசி சந்திப்பும், கடைசி முத்தமுமாக முடிந்து போகும் என்று அவள் அறியவில்லை. அவர்களுடைய முதல் சந்திப்பே முதலும் கடைசியுமான சந்திப்பாகும் என்று அறியாமலே கண்கலங்கி கை அசைத்து விழி மூடாமல் வழி அனுப்பி வைத்தாள். ரயில் முன்னோக்கிச் சென்றது அவள் மனம் பின்னோக்கிச் சென்றது. அவளது கால்கள் தன்னிச்சையாக அவளது வண்டி நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்றது. சட்டென்று நின்றாள். எதையோ தேடினாள். எதையோ தொலைத்த ஒரு உணர்வு. கைப்பையை மறந்து விட்டேனோ என்று நினைத்து இரண்டு தோள்களையும் மாறி மாறி திரும்பிப் பார்த்தாள். அது அவள் தோளில்தான் தொங்கிக் கொண்டு இருந்தது. ஒரு வேளை வழக்கமான பெரிய Hand bag ஐ விடுத்து இந்த சிறிய பையை எடுத்து வந்ததால் இந்த உணர்வோ என்று நினைத்தாள், ஒரு வேளை செல்போனை தொலைத்து விட்டேனோ என்ற சந்தேகம் அவளுக்கு கைப்பைக்குள் கையை விட்டு துழாவினாள். அதுவும் அங்குதான் இருந்தது. தன் இரண்டு உள்ளங் கைகளையும் மாறி மாறி வெறித்துப் பார்த்தாள். அப்படி என்ன தான் தொலைந்துப் போனது என்று.  அதன் பின்னரே அவளுக்கு உறைத்தது. தொலைந்து போனது அவளது கைகளைப் பற்றி இருந்த அவனது கைகள் என்று. காலையில் இருந்து அவனது கையைப் பற்றி இருந்த அவளது கை அதைக் காணாமல் தேடுகிறது என்று அப்போதுதான் புரிந்தது அவளுக்கு. 

   அப்படியே ஏதோ பித்துப் பிடித்தாற்போல் ஒரு மனநிலையில் தன்னிச்சையாக நடந்து சென்று வண்டியை எடுக்கச் சென்றாள். வண்டி சீட்டில் அவன் உட்கார்ந்து இருந்த இடத்தைத் தடவிப் பார்த்தாள். தனியாக வண்டியை ஸ்டார்ட் செய்து வீடு நோக்கிச் சென்றாள். தனியாக அந்த வண்டியில் செல்வது வழக்கம் தான் என்றாலும் அன்று மட்டும் வெறுமையாக உணர்ந்தாள். கண்கள் கலங்கியது. அவன் இனி நீ அழவே கூடாது என்று சொன்னதை நினைத்துப் பார்த்து அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு நேற்று அவனைச் சந்தித்ததில் இருந்து இந்த நிமிடம் வரை நடந்ததை எல்லாம் நினைத்துக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்தாள். அளவுக்கு அதிகமான சந்தோஷமும் அளவுக்கு அதிகமான சோகமும் ஒரு சேர அவளிடம் இருந்தது. வீட்டுக்கு வந்தடைந்து விட்டேன் என்று அவனுக்கு கால் செய்து சொன்னாள். மிஸ் யூ டியர் நாளைக்கு ஊருக்கு போயிட்டு கால் பண்றேன் குட் நைட் என்று பதில் அவனிடமிருந்து. அவனுக்கு இவள் எந்தப் பரிசுப் பொருளயும் தரவில்லை. இவள் நினைவாக இவளுடைய நினைவுகளை மட்டுமே பரிசளித்து இருந்தாள். அவன் நினைவுகளோடு அப்படியே தூங்கிப் போனாள். அதே "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே" பாடலைக் கேட்டுக் கொண்டே. அடுத்த நாள் காலை 6 மணிக்கு இவள் ஷூட்டிங் போய் விட்டாள். மதிய உணவு இடைவேளையில் அவனுக்கு ஃபோன் செய்து ஊருக்கு பத்திரமாகப் போய் சேர்ந்துவிட்டானா என்று மட்டும் கேட்டுவிட்டு இரவு வீட்டுக்கு சென்றதும் பேசுகிறேன் என்று ஃபோனை வைத்துவிட்டாள். வேலை முடித்து வீட்டுக்கு செல்ல இரவு 8 மணி ஆகிவிட்டது. வீட்டுக்கு போனவுடன் அவனுக்கு மெசேஜ் செய்தாள். ஹாய் டியர் மிஸ்ஸிங் யூ என்று பதில் வந்தது அவனிடமிருந்து. மீ டூ. என் உடம்பு மட்டும்தான் இங்கே இருக்கு. என் நினைப்பு எல்லாம் உன்னைப் பத்தி மட்டும்தான் என்றாள். நானும் நேத்து நடந்ததை எல்லாம் நினைச்சுட்டு இருக்கேன் என்றான். அதேதான் நானும் என்றாள். 

“ஏதோ Drug அடிச்ச மாதிரி ஒரு ஃபீல். ”

“அடப்பாவி”

“ஆமா”

“காதல் போதையா? காதல் மயக்கமா?”

“தெரில கிர்ர்னு இருக்கு, நீ ரெண்டு மூணு லைன்ல புக் ரிவ்யூ போடு ஃபேஸ்புக்ல”

”அது இன்னொரு தடவை ரசிச்சு பொறுமையா படிச்சு போடணும். சரி நீ அடிக்கடி கேட்பியே "Who am i to you"?ன்னு அதை இப்போ கேளேன் பிளீஸ்”

“ Who am i to you?” அவனும் கேட்டான்.

”Husband” ஒரே வார்த்தையில் பதில் அளித்தாள். ”எனக்கு அப்படித்தான் தோணுது”
“Thank you so much Dear ”

     முதல் நாள் சந்திப்பு நம்ம ஹனிமூன், இரண்டாவது நாள் we lived happily together. இப்ப நீ வேலைக்காக வெளி நாடு போற எனக்கு அப்படி தான் ஃபீல் ஆகுது என்றாள். "யா" என்று அவனும் ஆமோதித்து ஃபர்ஸ்ட் டே நா அவுட் ஆஃப் கன்ட்ரோல். ஆனா செகன்ட் டே லிட்டில் ப்ராக்டிகல் என்றான். போடா எனக்கு ப்ராக்டிகல் கொஞ்சமும் பிடிக்கல என்றாள். ஆமா ஆனா அதுக்கு அந்த பார்க் சரியான இடம் இல்ல என்றான். ஆமா அதையே தான் நானும் சொல்ல வந்தேன். பாத்தியா எப்பவும் நமக்குள்ள ஒரே மாதிரி thoughts தான். லேட்டஸ்ட் வெர்ஷன்ல சொன்னா நமக்குள்ள செம கெமிஸ்ட்ரி, ஓல்ட் ஸ்டைல்ல சொன்னா ரொம்ப அன்யோன்யம், நாம "made for each other" டா என்றாள். "ha ha most of the time அப்படி தான். இனிமே எக்மோர் போனாலோ, கிண்டி பார்க் போனாலோ சரவண பவன் போனாலோ உன்னோட ஞாபகம்தான் வரும்” என்றான். “அப்போ மத்த டைம்ல என் ஞாபகம் வராதா?” என்றாள். “ha ha நல்லா பேசக் கத்துக்கிட்ட நீ” என்றான். உன் கூட சேர்ந்துட்டேன்ல இனிமே பேச்சுகூட கவிதையாதான் இருக்கும்” என்று சொல்லி சிரித்துவிட்டு “சரிடா நான் ஆறு மணிக்கு ஷூட்டிங் போகணும்” என்றாள். அவன் ஒரு புகைப்படத்தை அனுப்பி ”நேத்து இந்த வழியா போனோம்ல” என்றான். 

“ஆமாடா ஏன்?”

”இல்ல இந்த போட்டோ பார்த்தேன் சும்மா தோணுச்சு” 

“டேய் மனசுக்குள்ள இவ்வளவு காதலை வச்சிகிட்டு பிராக்டிகலா பேசுறேன் அது இதுன்னு பேசுறது சுத்தமா புடிக்கலை. என்ன வேணும்னாலும் நடந்துட்டு போகட்டும். அதுக்கு நான் பொறுப்பு. I will never blame you because I love you so so much.”

“ம்ம் சரி டி. இப்ப தூங்கு காலைல சீக்கிரமா போகனும்னு சொன்னல இப்போ எனக்கும் தூக்கம் வருது” 

“பாத்தியா இதுவும் சேம் பீலிங். எனக்கும் தூக்கம் வருது. வா சேர்ந்து  தூங்கலாம்” . “நீ அங்கயும் நா இங்கயும்” 

“Be with me for ever, Don’t go away from me”.

“நீ போகச் சொன்னாலும் போக மாட்டேன். ஐ லவ் யூ. குட் நைட்” இதோடு முடிந்தது அன்றைய வாட்ச் அப் கான்வர்சேசன்.

     அடுத்த நாள் முழுவதும் அவளால் ஆன்லைன் வரவே முடியவில்லை. இரவு 9:30 க்குத்தான் அவனுடைய மெசேஜ் பார்த்தாள். என்னடா பேக்கிங் பண்ணியாச்சா? என்ன பண்ற என்றாள். பதில் ஏதும் வரவில்லை.அடுத்தநாள் காலை 7 மணிக்கு “கிளம்பியாச்சு” என்று ரிப்ளை வந்தது. “ Happy Journey ஊருக்கு போயிட்டு மெசெஜ் பண்ணு. ஐ லவ் யூ” என்று சொல்லிவிட்டு
ஷூட்டிங் கிளம்பி விட்டாள். அடுத்த நாள்..

 ஓய் Reached ஆ?  

“வந்தாச்சு. பழைய படி அதே ஸ்ட்ரெஸான வாழ்க்கை”

“அச்சோ அப்படி சொல்லாத நாந்தான் இருக்கேன்ல இப்போ காலேஜ் அட்மிஷனுக்காக கிளம்பிட்டு இருக்கேண்டா ஸாரி வந்து பேசுறேன்” என்று கிளம்பிவிட்டாள். 

    அதன் பின் மாலையும் அந்த ஷூட்டிங் வேலையாகப் போய் விட்டாள் மெசேஜ் கூட அனுப்ப முடியவில்லை. “ஹேய் எங்க இருக்க? என்னடி பண்ற? ” அவன் மனது அவளையே தேடியது. இன்னும் வீட்டுக்கு போகலடா போயிட்டு மெசேஜ் பண்றேன் என்று பதில் அனுப்பினாள். அவர்களுடைய இந்த இனிமையான காலத்தை அவளுடைய வேலை பெரும்பாலும் அபகரித்துக்கொண்டது. வீட்டுக்கு சென்றும் சரியாக பேச முடியவில்லை அடுத்த நாள் காலையும் 6 மணிக்கே புறப்பட வேண்டும் என்பதால் சீக்கிரமே தூங்கி விட்டாள். ஒரு வழியாக அடுத்த இரண்டு நாட்களில் ஷூட்டிங் வேலைகள் முடிந்தது. ”ஹேய் பேசாம நீ சென்னைக்கே வந்துடுடா இங்கேயே ஒரு வேலை தேடிக்கோ. நான் தினமும் காலேஜ்க்கு பாய் ஃபிரண்ட் கூட போய் இறங்குனா எவ்ளோ கெத்தா இருக்கும்.” என்றாள் சிரித்துக் கொண்டே. “நான் காலேஜ் சேந்துட்டேன் இல்லைனா நான் கூட அங்க ஒரு ஜாப் தேடி வரமுடியும் இப்போ ரெண்டு வருசம் எங்கேயும் நகர முடியாது. உன்னை ரொம்ப  மிஸ் பண்றேண்டா” என்றாள் வருத்தமாக. “ஏய் ஃபீல் பண்ணாதடி I’ll be with you always.” என்று சமாதானப் படுத்தினான். அதன் பின் தினமும் காலை சீக்கிரமாக காலேஜ் செல்வதால் வெகுநேரம் இரவு வாட்ச் அப் உரையாடல்கள் குறைந்து போயின. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அவன் விலகிச் செல்வது போல் உணர்ந்தாள். சரி அவனும் பிஸி அதான் என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

”நீ எப்போடா திரும்ப இந்தியா வருவ?”

“இதுக்கு மேல பிப்ரவரில தான் முடியும்”

“ஹூம் எல்லாரும் காதலர் தினம் வர்றதுக்காக பிப்ரவரிக்காக காத்திருப்பாங்க நான் என் காதலை சந்திக்கவே பிப்ரவரி வரைக்கும் காத்திருக்கணும்”

“................”

“என்னடா ஒரு ”ம்” ன்னு கூட ரிப்ளை பண்ண மாட்டேங்குற. கால் பண்ணுடா பேசி எவ்ளோ நாள் ஆச்சு” 
.
“Sure கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு”

ஆனால் ரொம்ப நேரமாக ஃபோன் வரவே இல்லை. மாடியில் இவன் கா(த)லுக்காக காத்திருந்தவள், 

“ஏய் இப்போ நான் கீழ போகனும் கால் பண்ணப் போறியா இல்லையா நீ  ரொம்ப மாறிட்டடா” 

“ஓய் அடி வாங்கப் போற” 

“வா வா அடிக்கவாச்சும் இங்க வா” என்றாள். பிறகு சில தினங்களில் ரம்ஜான் நோன்பு ஆரம்பமானது.

”ஏய் நீ ரம்ஜானுக்கு நோன்பு வைப்பியா”

“ஆமா ஏன் கேக்குற?”

“இல்ல நீ நோன்பு வச்சா நானும் வைக்கலாம்னுதான்”

“ஏய் லூசு அதெல்லாம் வேணாம் சொன்னாக் கேளு”

“இல்லடா ப்ளீஸ் என்னைக் கட்டாயப் படுத்தாத நான் நோன்பு வைக்கனும்னு ஆசை பட்டுட்டேன் ஒரு தடவ முடிவு பண்ணா பண்ணதுதான்” என்று அவளும் அவனுடன் சேர்ந்து நோன்பு வைத்தாள். அவளுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் பெரிதாக இல்லை. ஆனால் அவன் அங்கே சாப்பிடாமல் இருக்கும்போது இவள் இங்கே எப்படி சாப்பிட முடியும்? அவள் ஒரு பைத்தியக்காரி அவனைக் கணவனாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டாள். 

     ஆனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்ல ஆரம்பித்தான். இவள் அனுப்பிய நிறைய மெசேஜ்களுக்கு பதில் வரவே இல்லை.

“ஏன்டா பாத்துட்டு ஒரு ரிப்ளை கூட பண்ண மாட்டியா”

“நான் மெசேஜ்லாம் படிச்சுட்டு தான் இருக்கேன்” 

“அது தெரியும் அதான் ப்ளூடிக் காமிக்குதே” 

அவன் சிரித்தான்.

“ என்னடா சிரிக்குற லூசு. நீ ரிப்ளை பண்ணலனாலும் நா உன்ன இன்னும் இன்னும் அதிகமா  தான் லவ் பண்ணுவேன்” என்றாள் சிறுபிள்ளை போல. 

   மறுபடியும் "ha ha" என்று பதில் அனுப்பி விட்டு எனக்கு அது தெரியும் என்றான். பிறகு அவள் நோம்பு வைப்பதில் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொண்டாள். ஏய் இப்படி பண்ணாத ஃபாஸ்டிங் லாம் வேணா சொன்னா கேளு நீ இப்படி பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல கோவம் தான் வருது என்றான். அச்சச்சோ நோன்பு வைக்க ஆரம்பிச்சாச்சு. இப்ப பாதில விடுறது தப்பு என்று சொல்லி  பிடிவாதமாக நோன்பு வைத்தாள். அதன் பின் இரவு நேரத்தில் சாப்பிட்டியா என்று மட்டும்தான் மெசேஜ் வரும் அதன் பின் நான் வெளியே போறேன். வேலையா இருக்கேன் என்று ஏதேதோ சொல்லி சரியாக பேசவே இல்லை அவன் மெசேஜில் கூட. அவனுடைய கவிதைகளையும், கதைகளையும் படித்து அவனிடம் சிலாகித்துக் கொள்வாள். அதைப் படித்துவிட்டு இவளுக்குத் தோன்றியதை சொல்லுவாள். என்னடா நான் இவ்ளோ பேசுறேன் நீ பதில் எதுவுமே சொல்ல மாட்டேங்குற நான் சொன்னது நல்லா இருக்கா இல்லையா என்றாள். ”நல்லாதான் இருக்கு” அவன். ”எதுக்கு இப்படி வேண்டா வெறுப்பா பேசுற? என்னவோ பண்ணு போ ஆனா நீ என்ன பண்ணாலும் என் மனசு மாறாது. நீ என்ன டியர்ன்னு சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? கடைசியா டியர்னு எப்போ சொன்னன்னு ஞாபகம் இருக்கா” என்றாள். “ப்ளீஸ் புரிஞ்சுக்கோ நான் ஆபிஸ் வேலையில மாட்டிக்கிட்டேன். நிறைய  ப்ரஷர்" என்றான். சரி ஓக்கே But other than office time? சரி விடு நான் எதுவும் compel பண்ணல. உனக்கு எப்போ தோணுதோ அப்போ பழைய படி பேசு. அதுவரை நம் நினைவுகளோடு  வாழ்ந்துக்குறேன் என்றாள். அடுத்தநாள் இரவு...அதுக்குள்ள நான் உனக்கு  அலுத்துப் போயிட்டேன்ல அதான் உனக்கு ஒரு மெசேஜ் கூட பண்ண தோணல. ஆனா இதெல்லாம் என்னோட காதலை எந்த விதத்துலயும் மாத்தாது. ஆனா நீ இப்படி பண்றது என்னை ரொம்பவே Hurt பண்ணுது. இதுக்கு மேல உனக்கு எப்படி சொல்லி புரிய வெக்குறதுன்னு தெரில உன்னை எவ்ளோ லவ் பண்றேன் எவ்ளோ மிஸ் பண்றேன்னு என்றாள்.

"எனக்குத் தெரியும், எனக்கு உன்னைப் பிடிக்கும் ஆனா என்ன லவ் பண்ணாத இப்படி ஃபீலிங்காலாம் இருக்காத. As a friend ஆ உன்கூட நான் எப்பவும் இருப்பேன் இதுதான் மொதல்ல இருந்து சொல்றேன்"

"நீ என்னை விட்டு இவ்ளோ தூரம் இருக்குறது கூட பிரச்சனை இல்லை உன்னோட வேலை அப்படி. ஆனா மனசளவுல தூரமா போயிட்ட மாதிரி இருக்கு அதான் கஷ்டமா இருக்கு"

"ஆனா இப்பலாம் நிஜமாவே நிறைய வேலை, புரிஞ்சுக்கோ"

"நிறைய விஷயம் உன்கிட்ட ஷேர் பண்ண நினைச்சேன். ஆனா நீ எப்பவும் பிஸிதான்" 

" நான் என்ன பண்ணட்டும் இப்பவும் நான் பிஸிதான்"

இப்படியே அவனிடம் கேட்டுக் கேட்டு ஒரு கட்டத்தில் அவளுக்கு அலுத்துபோய் விட்டது. மறுபடியும் Friend ஆ மட்டுமே இருக்க முடியாது. Friend காதலியா மாறலாம். ஆனா காதலி மறுபடியும் ரிவர்ஸ் கியர் போட்டு ஃப்ரண்டா மாற முடியாது என்று எவ்வளவோ சொல்லி புரிய வைக்க நினைத்தாள். ஆனால் அவன் எதையும் புரிந்துகொள்ள வில்லையா இல்லை புரிந்தும் ஏற்றுக் கொள்ள வில்லையா என்று இவளுக்குப் புரிய வில்லை. ஒரு கை ஓசை போல் வாட்சப் மெசேஜில் ஒரு பக்கம் இவள் அனுப்பிய மெசேஜ்கள் மட்டுமே இருந்தது. அவனிடம் இருந்து வரும் பதில் மெசேஜ்கள் அரிதாகவே ஆனது. அவன் மறுபடியும் மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்பதை மட்டுமே கூறி வந்தான். ஆனால் அவளோ கல்யாணம் தானே பண்ணிக்க முடியாதுன்னு சொன்ன, நான் ஆல்ரெடி லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். நீ என்னை கல்யாணம் பண்ணலைனாலும் லவ் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடித்தாள். நீ இப்படி பண்ணா நான் உனக்கு ரிப்ளை கூட பண்ண மாட்டேன் என்றான். இதுக்கு மட்டும் ரிப்ளை பண்ணு, காலைல இருந்து எத்தனை மெசேஜ் அனுப்பியிருக்கேன்  அதுக்கெல்லாம் ரிப்ளை பண்ணிடாத என்றாள். எனக்கு தெரியும் நீ என்னை அவாய்டு  பண்ண ஆரம்பிச்சுட்ட என்றாள். நீ இப்படி பண்ணாதன்னு தான் சொல்றேன் அதுக்கு பேரு அவாய்ட் பண்றதுன்னு அர்த்தம் இல்லை என்றான். நான் காலைல இருந்து அழுதுட்டு இருக்கேன் அத பத்தி் உனக்கு என்ன? நீ ஆரம்பத்துல இருந்தே கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்ன ஆனா உன்னோட மெசேஜ்ல லவ், ரொமாண்ஸ், கேலி, கிண்டல் எல்லாமே இருந்துச்சு. இப்ப எங்க போச்சு அதெல்லாம் என்றாள் களைத்துப் போய். இப்ப கேர் இருக்கும் உன்னை பிடிக்கும் ஆனா நீ இப்படிலாம் பண்ணாத நான் எப்பவும்  போலத்தான் இருக்கேன். I don’t want any emotional attachment என்று முடித்துக்  கொண்டான். 

   அவள் அழுத படியே உறங்கிப்போனாள் "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே" பாடலைக் கேட்ட படி. மறுபடியும் மறுபடியும் இவள் காதலை புரிய வைக்க விளக்க உரைகள் ஆனால் மறுபடியும் மறுபடியும் அவன் இன்னும் இன்னும் விலகிச் சென்றான். அப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. அவன் அவளை விட்டு வெகுவாக விலகிப் போய் இருந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுக்கு பெண் நிச்சயிக்கப்பட்ட விஷயம் இவள் தலையில் பேர் இடியாக வந்து விழுந்தது. அதுவும் இவர்களுக்கு பொதுவான ஒரு ஃப்ரண்ட் மூலமாக. யாரோ ஒரு மூணாவது மனுஷன் மூலமா இதை தெரிஞ்சுக்க வேண்டியிருக்கே என்று அவள் அப்படியே உடைந்துப் போய் விட்டாள். அவனுக்கு ஒரு மாதம் முன்பே பெண் நிச்சயித்து விட்டார்கள். ஆனால் அது தெரியாமல் என்றாவது ஒரு நாள் தன்னைப் புரிந்துக் கொள்வான் தன் காதலை ஏற்றுக் கொள்வான் என்று காத்திருந்தாள் பைத்தியக்காரத்தனமாக . இவனுக்கு மெசேஜ் செய்து கால் பண்ணச் சொல்லி பேசினாள். இப்ப என்னை என்ன பண்ண  சொல்ற இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றியா? என்னால உன்னக் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று முகத்தில் அறைந்தது போல்  சொல்லி விட்டான். அந்த நொடி அவளுக்கு செத்துவிடலாம் போல் இருந்தது. அழுது அழுது அளவுக்கு அதிகமாக எமோஷனலாகி உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. ஒரு மாதம் எதோ பித்துப் பிடித்தது போல் வாழ்ந்து வந்தாள். அவனுடைய நிச்சயதார்த்தத்துக்கு இந்தியா வரப்போவதும், எப்போது எங்கேஜ்மென்ட் என்றும், என்று இந்தியா வருகிறான் என்றும் அதுவும் சென்னை வழியாகதான் அவன் சொந்த ஊருக்கு போக போவதும், அதே மூன்றாவது நபர் மூலம் தெரிய வந்தது. அவன் சென்னை வந்து இறங்கும் நாள் அவனுடைய பிறந்தநாள் வேறு. காலேஜில் இருந்து திரும்பி வரும் வழியில் அவன் முதன் முதலாக ஒரு நண்பனாக சென்னை வரப் போவதாக சொன்னதையும் அந்த உற்சாகத்தையும் நினைத்து அழுதுகொண்டே வண்டி ஓட்டி வந்தாள். ஒரு வார்த்தை கூட சொல்லலையே சென்னை வர்றேன்னு என்ற ஒரு கேள்வியைத் தவிர பேசுவதற்கு வேறு எந்த வார்த்தையும் இல்லை அவளிடம். As a friend ஆ அவனை ரொம்ப மிஸ் பண்ணா more than a lover, இரவெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. அப்படியே தூங்கிப் போனாள். அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து மெசேஜ்கூட அனுப்ப முடியவில்லை. அவன் அவள் வாழ்வில் வந்த பின் வரும் முதல் பிறந்தநாள் வேறு. 

     அடுத்த மூன்று நாட்கள் காலேஜ் கல்ச்சுரல்ஸ், இவளைத் தவிர அனைவரும் அத்தனை மகிழ்ச்சியாக ஒரே ஆட்டம் பாட்டம் என்று குதூகலித்தனர். காலேஜ் கல்ச்சுரல்ஸில் “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” பாடலைப் பாடிய சத்யப்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக வந்து அதே பாடலை பாடினார். அதைக் கேட்டு அத்தனை கூட்டத்திலும் அழுகையை கட்டுப் படுத்த முடியாமல் அழுதுவிட்டாள். பிறகு அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் கிளம்பிவிட்டாள். யாரையாவது கட்டிப்பிடித்து ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால் அப்படி யாரும் இல்லை அவளருகில். அப்படியே தனியாக அழுது அழுது ஓய்ந்து போனாள். அடுத்த நாள் நிச்சயதார்த்தம். அன்று ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை அவள் கண்களில் இருந்து. சமீருக்கே ஃபோன் செய்து திட்டினால் என்ன என்று தோன்றியது, இன்னைக்கு நல்லா திட்டணும் சண்டை போடனும் என்று நினைத்து கால் செய்தாள் அதே “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” காலர் டியூன் ஒலித்தது. அவன் இன்னும் அதை மாற்றவில்லை. அதைக் கேட்டதும் மறுபடியும் அது அவளை ஏதோ செய்தது. எதுவும் சொல்லாமல் “ஏன்டா  ஒரு வார்த்தை கூட சொல்லணும்னு தோணலைல” என்று மட்டும் கேட்டு விட்டு ஃபோனை வைத்தாள். அவனுடன் வெகுநாட்கள் கழித்துப் பேசியதாலோ என்னவோ கொஞ்ச நாள் அழவே இல்லை. 

     கொஞ்ச நாளைக்குப் பிறகு அவனே கால் செய்து பழைய நண்பனைப் போலவே இயல்பாக பேசினான். இவளும் அப்போதைக்கு இயல்பாக பேசிவிட்டு வைத்துவிட்டாள். மறுபடியும் சில தினங்கள் கழித்து அவனிடமிருந்து கால் “இப்போ கொஞ்சம் பிஸியா இருக்கேன்” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள். அவளால் முன்பு போல் இயல்பாகப் பேச முடியவில்லை. இயல்பாக பேசுவது போல் நடிக்கவும் முடியவில்லை. அதன் பின் மொத்தமாக அவனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாள். அப்படியே சில மாதங்கள் கடந்து போனது. இதோ அவனுக்கு கல்யாணம், என்ன செய்துவிட முடியும் அவளால்? அவனுடன் சேர்ந்து கொண்டாட நினைத்த இந்தக் கொண்டாட்டமான நாளை கொண்டாடாமலேயே கடந்து செல்லப் போகிறாள் இவள் மட்டும் தனியாக. அவன் அவளைக் காதலிக்கிறானா இல்லையா காதலித்தானா இல்லையா என்பதுகூட அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக, முடிந்து போனது அவளின் காதல். என்றாவது ஒரு நாள் தன் காதலைப் புரிந்து கொண்டு தன்னைக் காதலிப்பான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவள் இனி ஏதோ ஒருநாள் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு நிமிடமாவது தன்னை காதலித்திருப்பான் என்ற நம்பிக்கையில் வாழப் போகிறாள் சமீரின் மீராவாக. கண்ணனின் மீராவைப் போல். ஆம் காதலுக்காக தற்கொலைகள் குறைந்து போய் விட்டது. அந்த நம்பிக்கையில் தான் காதலும் எளிதாக மறுக்கப்படுகிறது. இதோ அவளின் காதல் கதையை அவளே எழுதி முடித்துவிட்டாள். அதுவும் அதே "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே" பாடலை ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டே. அவனோடு தன் வாழ்க்கை முழுவதும் பயணிக்க நினைத்தவள் 

     இனி அவனுடைய எழுத்துக்களோடு பயணிக்கப் போகிறாள். கூடவே அவளுடைய எழுத்துகளும் சேர்ந்தே பயணிக்கும். ஏற்றுக் கொள்ளப்படாத காதல் முடிவு பெறுவதும் இல்லை முற்றுப் பெறுவதும் இல்லை. அவளுடைய காதல் அவளுடன் என்றும் வாழந்துகொண்டிருக்கும் அவளது இதயத்தில் மட்டும் ரகசியமாய். அவள் அப்படியே தூங்கிப் போனாள். "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே" பாடல் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டே, அவள் மனதில் இருந்த "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு" ரகசியங்களைப் பாடிக் கொண்டிருந்தது ரகசியமாய்...!

# ஆம் காதல் என்றும் அழிவதில்லை...!

No comments:

Post a Comment