Search This Blog

25 November 2013

கோழிக்கிறுக்கல்

"தம்பி.. இங்கே வாயேன்"
விடியற்காலையில் எழுந்தபோதே அம்மாவின் அழைப்பு.

சென்றுபார்த்தபோது எனக்கும் மகிழ்ச்சிதான்.

அடைவைக்கப்பட்ட பதினைந்துமுட்டைகளுமே பொரிந்து
கூடைக்குள் உமிபுடைசூழ கோழிக்குஞ்சுகளாய் மாறிப்போயிருந்தன.


ஒன்னு.. ரெண்டு.. மூனு..

ஏழு கருப்பு. எட்டு வெள்ளை.


எல்லாகுஞ்சுகளையும் வெளியேவிட்டபோதுதான் கவனித்தேன்.

கருப்புகளிலொன்றுக்கு கால்களிரண்டும் சூம்பிப்போயிருந்ததை.


"எம்மா.. இங்க பாரும்மா"

"அடப்பாவமே..!"

அதை தூக்கிப்பார்க்கலாமா?

கோழியின் சத்தம்..
அதை எப்படிவிளக்குவது?

பெண்சிங்கத்தின் உறுமலிலிருந்து பெற்றதாயின் அலறல்வரை
எல்லாவற்றையும் அதற்கு உவமையாக்கலாம்.

இருந்தாலும் தூக்கிவிட்டேன்.
கால் சூம்பிப்போய்தானிருந்தது.

உடலூனமுற்றது? மாற்றுத்திறனாளி?

எதுவுமே ஒப்பாகவில்லை அதற்கு.

கீழே இறக்கிவிட்டேன்.

அப்படியே நின்றுகொண்டிருந்தது.
சாய்ந்துகொண்டிருந்தது.
உட்கார்ந்துகொண்டது.


கே..கே..கே..
இரைதேடிப்புறப்பட்டது அந்த கோழி.

"நொய் இருக்குல்லமா?"

"இருக்குடா"

நொய்யை கைகொள்ள அள்ளிவிசிறினேன்.

சிமெண்ட்தரையில் கால்களால் சீய்த்தவாறே
கே..கே..கே..

கோழி கால்களால் எதற்குசீய்க்கிறது?

தரைக்குக்கீழுள்ள புழுபூச்சிகள்?
ஆமாம் அதற்குத்தான்.

ஆனால் அந்த சிமெண்ட்தரைக்குத்தெரியுமா
அது கோழிகளின் இயல்புதானென்று?

சரக்..சரக்..
கோழியின் நகங்கள் தேய்ந்துவிடாதா?

எல்லா குஞ்சுகளும் க்யாங் க்யாங்.
அதுவும் தான்.
ஆனால் அங்கே உட்கார்ந்தபடியே.

நொய்யை கொஞ்சமெடுத்து அதனிடம்போட்டேன்.

அடுத்தநாள் கோழி தன்பரிவாரங்களுடன்
வேட்டைக்குக்கிளம்பியது.

வைக்கோற்போர்..
குப்பைமேடு..
சாக்கடையோரம்..


அந்தக்குஞ்சால் நடக்கமுடியவில்லை.
ஆங்காங்கே உட்கார்ந்துகொண்டது.

நானும் இப்படித்தான் இருந்திருப்பேனோ?

வலித்தது.

கடைசியாக வீட்டிற்குள் புகுந்தது அந்தப்படை.

நிலைப்படியை தாண்டிவிட்டன.

அந்தக்குஞ்சுமட்டும் உயிர்போவதுமாதிரி
க்யாங் க்யாங்.

கோழியைப்பார்த்தேன்.
அந்த க்யாங் க்யாங்ஙை கண்டுகொள்ளவேயில்லை.

நேற்று அந்தக்குஞ்சை பிடித்தபோது கொத்தவந்தது
இப்போது கண்டுங்காணமற்போகிறதே!
இதை எப்படிப்புரிந்துகொள்வது?

உடன்பிறந்தகுஞ்சுகளுக்கும் அந்த க்யாங் க்யாங் காதில் விழவில்லைபோல.

ஒருவழியாய் மீண்டும் நான் உதவிக்குச்சென்றேன்.

எப்போதுமே நாமே உதவிக்கொண்டிருக்கமுடியுமா?

இன்று அந்த கோழிக்குஞ்சுகளும் சீய்க்கக்கற்றுக்கொண்டிருந்தன.

அந்தக்குஞ்சுமட்டும் அவற்றை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தது.

கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

அந்தக்குஞ்ச சேவலாகிவிடவேண்டுமென்று.
பின்னே?

அது கோழியாகி பின்னாளில் அதன்குஞ்சுகளுக்காக தரையை சீய்க்கமுடியாமல் தடுமாறுவதை காணப்பொறுக்கமாட்டேன்...

No comments:

Post a Comment