1940 களில் குடும்ப வறுமையால் சினிமாவில் நுழைந்து , அந்தக் கால இசையமைப்பாளர்களின் அரவணைப்பை பெற்று, இசை உதவியாளராக உயர்வு பெற வெறும் அனுதாபம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இயல்பான ஆற்றலும் , இசை மீதான தீராத காதலுடன் தான் அவரது இசை வாழ்வு தொடங்கியது.
‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை. நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.
இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில் ‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.
காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.
எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம். .ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.
அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார். “நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.
எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.
‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,
'தேடினேன் வந்தது...
டின்டக்கு டின்டக்கு...
நாடினேன் தந்தது
டின்டக்கு டின்டக்கு'
என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.
‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்
‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'
என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி. ‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்
‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு
‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.
ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை. சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.
‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.
‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.
விஸ்வநாதன் தன் தந்தையை மூன்றுவயதில் இழந்தவர். இளமைக்காலம் துயரமும் புறக்கணிப்பும் மிக்கது. முறையான கல்வி அவருக்கு கிடைக்கவில்லை. தட்சிணை கொடுக்க முடியாததனால் குருவின் வீட்டில் ஏவல்வேலைகள் செய்து இசை பயின்றார். சென்னைக்குவந்த தொடக்க காலத்தில் தேனீர் பரிமாறும் பையனாக, உதவியாளனாக வேலைபார்த்தார். அந்த நிலையிலிருந்து தன் மேதமை ஒன்றையே உதவியாகக் கொண்டு உயர்ந்து இசை மன்னராக ஆனார்.
எம் எஸ் விஸ்வநாதன் தன் வாழ்நாளில் எந்த தேசிய விருதையும் பெறவில்லை. ஏன் ஒரு மாநிலஅரசு விருதுகூட அவருக்கு அளிக்கப்படவில்லை. குறிப்பிடும்படியாக அரசின் எந்த அங்கீகாரமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. அவர் உலகியலே தெரியாத எளிய மனிதர். அதிகார அமைப்புகளுக்குப் பின்னால் செல்லத் தெரியாதவர். அவருக்காக பேச என்றுமே எவரும் இருக்கவில்லை..ஆனால் அது வருந்தத் தக்கதல்ல என்றே சொல்வேன். அவரைப்போன்ற ஒரு மேதையின் இசையுடன் ஒப்பிடும் தகுதி, பெரும்பாலும் தொடர்புகள் மூலம் அடையப்படும் நம் விருதுகளுக்கு இல்லை.
நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். 'நீராரும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார். ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார்.
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்.. சொந்த குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி.
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்!
`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர்.அவருடன் இணைபிரியா சகபாடியாக இருந்த கவிஞர் கண்ணதாசன் மெல்லிசைமன்னர் பற்றி இப்படி நினைவு கொள்கிறார்.
” அவனுக்கு இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாது.அவன் அரசியல், உலக நடப்புக்கள் பற்றி கேட்டால் சிரிப்பாக இருக்கும். ஆனால் இசை என்று வந்தால் , உலகெங்கிலும் என்னென்ன இசை உண்டு என்பது அவனுக்கு தெரியும்..” .
`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். எதை எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்கிற வித்தை அறிந்தவர், எம்.எஸ்.வி. சங்கீதத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு மேல் செய்தவர்.
எஸ் வி அடிக்கடி மேடைகளில் சொல்லும் ஒரு வரி உண்டு 'இறக்கும் மனிதர்கள், இறவாப்பாடல்கள்'. ஆம், மனிதர்கள் உருவாக்கி வழங்கும் எல்லா விருதுகளும் அம்மனிதர்களுடனேயே அழிபவை ஆனால் ஒரு தேசத்தின் ரசனையையே வடிவமைத்த எம் எஸ் விஸ்வநாதனின் இசை காலத்தால் அழியாதது...!
நன்றி - இணையம்.



Wonderfully put. The compositions of MSV are so spontaneous, rich, delightful, and multi-layered that one sees new beauty even if rehearing the song for the 100th time. No musician comes close!
ReplyDeleteDear Rajesh, wonderful blog. Thank you. The comment from Unknown is also so well put. MSVs music is so rich yet so simple at the same time-- this can only come from divine inspiration. No other composer has reached this height, in light music, anywhere in the world....
Delete